மாஸ்கோ: இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவு வலுவானது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உக்ரேன் போரின் விளைவுகளை ஒட்டுமொத்த உலகமும் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று வலியுறுத்திய அவர், எதன் காரணமாகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு பல வகையிலும் சாதகமாக உள்ளது. எனவே, இனி வரும் நாள்களிலும் இந்நிலை தொடரும்.
"கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கொரோனா பெருந்தொற்று நெருக்கடியானது உலக பொருளியலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்நிலையில், உக்ரேன்-ரஷ்யா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் இப்போது பார்க்கிறோம். எனவே, 'இது, போருக்கான காலம் அல்ல' என இந்தியப் பிரதமர் கூறியதை, தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

