அகமதாபாத்: குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம், மதுபானங்களை தேர்தல் பறக்கும் படைகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம், மது, இலவசப் பொருள்களைவிட தற்போது ஐந்து மடங்கு பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை ரூ.50 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.9 கோடி மட்டுமே சிக்கியது. இதேபோல் இரு மாநிலங்களி லும் ஏராளமான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, குஜராத்தில் இதுவரை 71 கோடி ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரூ.27 கோடி மட்டும் சிக்கியது.
தேர்தலை ஒட்டி குஜராத்தில் சூதாட்டக் கும்பல்கள் சுறுசுறுப்படைந்துள்ளன. இம்முறை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இணையம் வழி தேர்தல் சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே குஜராத்தில் இருமுறை எம்எல்ஏவாக இருந்த பாஜகவின் கேசரி சிங் சோலங்கிக்கு இம்முறை அக்கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இதனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வடக்கு ஜாம் நகர் தொகுதியில் களமிறக்கப்படுகிறார்.
இதற்காக பிரதமர் மோடிக்கு சமூக ஊடகத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜோ.

