புதுடெல்லி: கடும் சவால்கள்தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் முன்னைவிட நெருக்கம் பாராட்ட வைப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் உலகப் பொருளாதாரத்தின் பாதைகள் வடிவமைக்கப்படுவதாகவும் நொய்டாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் இந்திய மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
அலுவல்பூர்வ பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள அமைச்சர் ஜேனட் யெலன், உலகில் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளியலைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் இருதரப்பு வர்த்தகம் வரலாறு காணாத உச்சத்தை எட்டிஉள்ளது என்றும் தெரிவித்தார்.
"விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்கின்றன.
"பசுமை ஹைட்ரஜன், சூரிய ஒளி ஆற்றல் போன்ற பல துறைகளில் இந்தியா அதிகார மையமாக மாற வேண்டும் என்ற லட்சியத்தை அமெரிக்கா வரவேற்கிறது," என்றார் அமைச்சர் ஜேனட் யெலன்.
இருநாட்டு மக்களும் நிறுவனங்களும் அன்றாட அடிப்படையில் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"அமெரிக்காவின் இன்றியமையாத கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
"அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அது மேலும் வளரும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார் அமைச்சர் ஜேனட்.

