சென்னை: பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு தயாரிப்புகளுக்கு இந்தியாவில் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலை சீனாவில் இயங்கி வருகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் அங்கு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தியாவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி உள்ளது அந்நிறுவனம்.
சீனாவில் உள்ள தொழிற்சாலையில் சுமார் இருநூறாயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில், 17,000 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை மிக விரைவில் 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. 53 ஆயிரம் பேர் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.