பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து குடித்து, 20க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிய சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்தது. வனத்துறையினர் மேளம் அடித்து யானைகளை விழிக்கவைக்க வேண்டியதாயிற்று.
ஒடிசாவில் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர், நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக மஹுவா பூக்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்திருந்தனர். பானைகளில் ஊற்றி அந்தத் தண்ணீரைப் புளிக்க வைத்திருந்தனர்.
இந்நிலையில், புளிக்க வைக்கப்பட்ட பானைகளை எடுத்து, மதுபானம் தயாரிக்க வனப்பகுதிக்கு பழங்குடியினர் சென்றபோது, அங்கு பானைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, மஹுவா பூக்களைப் போட்டு ஊற வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் காணாமல்போனதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அக்கம்பக்கத்தில் சுற்றிப் பார்த்தபோது, பானைகளில் இருந்த நீரை யானைக் கூட்டம்தான் குடித்தது என்பதை அறிந்தனர். மஹுவா பூக்கள் போட்டு ஊறவைக்கப்பட்டிருந்த புளித்த நீரை மொத்தம் 24 யானைகள் அருந்திவிட்டு மணிக்கணக்கில் ஆழ்ந்து தூங்கியதாகக் கூறப்படுகிறது.
கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஷிலிபாடா முந்திரிக் காடு அருகே வசிக்கும் பழங்குடி மக்கள், மஹுவா பூக்களை ஊறவைத்து மதுபானம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், "காலை 6 மணியளவில் நாங்கள் மஹுவா பானம் தயாரிப்பதற்காக காட்டுக்குள் சென்றோம். அப்போது அங்கு அனைத்து பானைகளும் உடைந்திருப்பதையும் புளிக்கவைக்கப்பட்ட தண்ணீர் காணாமல்போனதையும் கண்டோம். கூடவே யானைகள் தூங்குவதையும் கண்டோம். அப்போதுதான் புரிந்தது, காய்ச்சிய தண்ணீரை யானைகள் குடித்துவிட்டன என்று. மதுபானம் பதப்படுத்தப்படாமல் இருந்தது. யானைகளை எழுப்ப முயற்சித்தோம். ஆனால் அவை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் எழுப்ப முடியவில்லை. பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம்,'' என்றனர்.
"யானைகளை எழுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. மேளங்கள் அடித்துதான் எழுப்பினோம். பின்னர், யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. ஆனால் அவை உண்மையிலேயே மஹுவா பானத்தை குடித்ததா என்று உறுதியாக கூறமுடியாது. ஒருவேளை அவை சாதரணமாகக்கூட ஓய்வுவெடுத்து உறங்கிக் கொண்டிருந்திருக்கலாம்," என வனக்காப்பாளர் காசிராம் பத்ரா தெரிவித்தார்.


