விசாகப்பட்டினம்: தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆந்திரப் பிரதேசத்தில் 15,233 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
ஆந்திரப் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரித் திடலில் நடைபெற்ற விழாவில் அவர் உரையாற்றினார்.
"இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாறு படைக்கிறது. நமது வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது," என்றார் திரு மோடி.
அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டு உள்ளன என்று கூறிய அவர், "இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திரப் பிரதேசத்தில் வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் இணைப்பை மேம்படுத்தும்.
"இந்தப் புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் விரைவாக வளர்ச்சிபெறும்," என்று குறிப்பிட்டார்.
உலக நாடுகளின் விருப்பத்தேர்வின் மையப் புள்ளியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகத் திரு மோடி தமது உரையில் கூறினார்.
பிரதமரின் 'கதி சக்தி' போன்ற திட்டங்கள் நாட்டிற்கு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அவர் சொன்னார்.
'கதி சக்தி' திட்டம், உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தியது மட்டுமன்றி, செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளது என்றார் பிரதமர்.
உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த பார்வை முக்கியம். கடந்த காலங்களில் தனிப்பட்ட கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நாடு அதிக இழப்பைச் சந்தித்துள்ளது என்றார் அவர்.
புதிய பொருளாதார வழித்தடம், 3,778 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.
ராய்ப்பூருக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையில் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு இது அமைக்கப்படும். கடல்வளம் சார்ந்த பொருளியலுக்குத் தற்போது முன்னுரிமை தரப்படுவதைச் சுட்டிய அவர், துறைமுக மேம்பாட்டின் அடிப்படையிலான திட்டங்கள் முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார்.

