செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
dd052b0d-0dc3-4172-b083-ff8ed8aa847c
-

ரூ.8 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

தாணே: மகாராஷ்டிர மாநிலக் காவல்துறையினர் வாக்லே தொழிற்பேட்டையில் நேற்று நடத்திய சோதனையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல் பிடிபட்டது. இவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரைக் காவல்துறை தேடிவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை பாரத ரிசர்வ் வங்கி 2019ஆம் ஆண்டில் நிறுத்திவிட்டது. மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தையும் வங்கி படிப்படியாகக் குறைத்துவருகிறது.

அதிபரின் உருவத்தைக் கேலி செய்த அமைச்சருக்குக் கண்டனம்

நந்திகிராமம்: மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில அமைச்சர் அகில் கிரி, இந்திய அதிபர் திரௌபதி முர்முவின் உருவத்தைக் கேலி செய்யும் விதமாகப் பேசியது குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, அகில் கிரியைக் கிண்டல் செய்ததாகவும் அதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், அதிபரின் உருவத்தையும் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட நிலையில் தேவையின்றி அதிபரை அவமதித்த அமைச்சரைப் பலரும் கண்டித்துள்ளனர்.

நேப்பாளத்தில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு

சிட்டாமாரி: நேப்பாளத்தின் ரௌதகட் எனும் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைசெய்த இந்தியர்கள் 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது. மீட்கப்பட்டோரில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அடங்குவர். கொத்தடிமைகள் குறித்து தகவல் கிடைத்ததும் நேப்பாள அதிகாரிகள் தனிப் படை அமைத்து 38 பேரையும் மீட்டதாக ரௌதகட் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார். உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இவர்கள் பீகாரின் சிட்டாமாரி வட்டார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ஐஏஎஸ்' பயிற்சி வகுப்பில் ராமாயணம் குறித்த கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: முனைவர் விகாஸ் திவ்யகீர்த்தி, புதுடெல்லியில் உள்ள, இந்திய ஆட்சிப் பணிக்கான (ஐஏஎஸ்) தேர்வுக்குப் பயிற்சி தரும் 'திருஷ்டி ஐஏஎஸ்' நிலையத்தின் இயக்குநர். அண்மையில் இவர் தனது வகுப்பில் போர் முடிந்ததும் தம்மைக் காண ஆவலுடன் இருந்த சீதையிடம் தாம் சீதைக்காகப் போரிடவில்லை என்றும் இனி சீதையை ஏற்க இயலாது என்றும் ராமன் கூறியதாகச் சொன்னார் என்று காணொளி ஒன்று வெளியாகவே அதன் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முழுக் காணொளியையும் பார்த்தால் மட்டுமே உண்மை புரியும் என்று கூறிய கீர்த்தி, "நான் பேசியதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளன. புருஷோத்தமன் அகர்வால் எனும் முன்னாள் 'யுபிஎஸ்சி' உறுப்பினரின் புத்தகத்தில் இருந்தே நான் இதனைத் தெரிவித்தேன்," என்று விளக்கினார்.

மும்பையில் மாதைத் தாக்கிய சிறுத்தை

மும்பை: மும்பை புறநகர்ப் பகுதியில் ஆரே வனப்பகுதிக்கு அருகே அமைந்திருக்கிறது 'ஆரே காலனி' எனும் இடம். நேற்று முன்தினம் மாலை, வேலைமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 34 வயது மாது அங்கு சிறுத்தை ஒன்றைப் பார்த்தார். பயத்தில் ஓடத் தொடங்கிய அவர் கால் தடுக்கிக் கீழே விழுந்தபோது சிறுத்தை அவரைத் தாக்கியது. இதனால் மாதின் கழுத்திலும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன. தாக்கிவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி மறைந்ததாகக் கூறப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு மாதின் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிகிறது.