ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, இடது சிறுநீரகம் காணாமல்போனதை அறிந்துகொண்டதாக நோயாளி குறைகூறியுள்ளார்.
சுரேஷ் சந்திரா எனும் 53 வயது ஆடவர், அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்படவே வேறொரு மருத்துவரை நாடினார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுரேஷின் இடது சிறுநீரகம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
"சென்ற ஏப்ரல் 14ஆம் தேதி வயிற்றுவலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகக் கூறி எனக்கு அன்றைய தினமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரல் 17ஆம் தேதி வீடு திரும்பினேன்.
"அக்டோபர் 29ஆம் தேதி திடீரெனக் கடுமையான வலி ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவரை அணுகினேன். எனது வயிற்றின் இடது பக்கத்தில் அறுவை சிகிச்சைத் தழும்பு இருந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவர் 'ஸ்கேன்' செய்யச் சொன்னார்.
"அதில் எனது இடது சிறுநீரகம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு கேட்டேன். அதுபற்றி யாருமே பதிலளிக்கவில்லை," என்றார் சுரேஷ்.
அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பும் வரை உறவினர்கள் தன்னைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றார் இவர்.
இதுகுறித்து சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

