ஷாஜகான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை, ராம்கங்கை ஆகிய ஆறுகளின் பெயரில் பதிவான 3,912 ஏக்கர் நிலம், மோசடிக் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 300 கோடி ரூபாய்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரில் இவ்விரு ஆறுகளும் பாய்கின்றன. ஜலாலாபாத், காலன் பகுதிகளில், இந்த ஆறுகளின் பெயரில் 1952ஆம் ஆண்டு நிலங்கள் பதிவாகியிருப்பதை மாவட்ட ஆட்சியர் ரஷீத் அலி கண்டறிந்தார்.
விசாரணையில், 40 பேர் கொண்ட நில மோசடிக் கும்பல், இந்த இரண்டு ஆறுகளுக்குச் சொந்தமான 3,912 ஏக்கர் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததும் இவற்றின் பேரில் வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. அரசாங்க நடவடிக்கையில் இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகள் மோசடிக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.

