புதுடெல்லி: இந்தியா-அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகம் எதிர்வரும் 2030க்குள் 500 பில்லியன் முதல் 600 பில்லியன் டாலரை (ரூ.48.30 லட்சம்கோடி) எட்டக்கூடும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளாா்.
டெல்லியில் ஆங்கில நாளிதழ் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவா் பேசியபோது, "இந்திய-அமெரிக்க உறவு தொடர்ந்து மேம்பட்டு, வலுவடைந்து வருகிறது.
"இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் இப்போதைய காலகட்டத்தில் 175 பில்லியன் டாலா்களாக (ரூ.14.08 லட்சம்கோடி) உள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியாவின் சரக்குகள், சேவைகளின் ஏற்றுமதி மதிப்பு தலா இரண்டு ட்ரில்லியன் டாலரை (ரூ.161 லட்சம் கோடி) எட்டும் வேளையில், 2030க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 500 முதல் 600 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், கல்வி நிறுவனங்களின் தலைவா்கள், மூத்த ஆசிரியா்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் பியூஸ் கோயல், "மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி நாளைய தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் உள்ளதா என்பதையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் சொந்தமாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆராயவேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
இதனிடையே, நாட்டின் பொருளியல் சூழலும் நிதித்துறையும் வலுவாக இருப்பதால் உலகின் வேகமாக வளரும் பொருளியலாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளாா்.
டெல்லி கருத்தரங்கில் அவா் கூறுகையில், "அனைத்துலக நிகழ்வுகளின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளியல் வீழ்ச்சியை எதிா்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பொருளியல் சூழல் வலுவாக உள்ளதால் நாட்டின் நிதித்துறையும் நிலையாக உள்ளது. அதனால், நாட்டின் வங்கித் துறை வலுவாக இயங்கி வருகிறது.
"தற்போதைய சூழலில் பொருளியல் வளா்ச்சிக்கான கணிப்புகள் சிறந்த நிலையில் உள்ளன. நாட்டின் பொருளியல் வளா்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கியும் 6.8 விழுக்காடாக இருக்கும் என அனைத்துலக நிதியமும் (ஐஎம்எஃப்) கணித்துள்ளன. எனவே, இந்த நிதியாண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளியலாக இந்தியா நீடிக்கும்," என்றார்.

