திருவனந்தபுரம்: கேரளாவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்த மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதி களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக மூணாறு பகுதியில் இரண்டு இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
குண்டலா அணை, மூணாறு 'எக்கோ பாயிண்ட்' அருகே இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
ஒரு நிலச்சரிவில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் இருந்து 11 பேர் அடங்கிய குழுவினர் மூணாறுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், குண்டலா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
வாகனத்தில் இருந்த 10 பேரும் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், ஓட்டுநர் ரூபேஷ், 40, வாகனத்தில் இருந்த கைபேசியை எடுக்கச் சென்றார். அப்போது, திடீ ரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் ரூபேஷ் மாயமானார்.
சனிக்கிழமை இரவு விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியில் மூணாறு தீயணைப்புத் துறையினர், காவலர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர்.
நேற்று காலைமுதல் இந்த மீட்புப் பணி மீண்டும் தொடர்ந்தது. மாயமான ரூபேஷ் பற்றிய விவரம் தெரியவில்லை. அவரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
"வடகரையில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று வாகனங்களில் இந்த வேனும் ஒன்றாகும். மலைச் சரிவில் 700 மீட்டருக்கு கீழே அந்த வேன் கண்டறியப்பட்டுள்ளது. அது காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதி," என்று காவல்துறையினா் கூறினர்.

