தன்னுடன் ஒன்றாக வசித்து வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கடந்த மே மாதம் 18ஆம் தேதி காதலர்களுக்கு இடையே சண்டை மூண்டது.
அதை அடுத்து, அஃப்தாப் அமீன் பூனவாலா என்ற அந்த ஆடவர் தன் காதலி ஷ்ரதாவைக் கழுத்தை நெரித்துக் கொன்றான்.
பின்னர் அப்பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டி புதிதாக ஒரு குளிர்சாதனப்பெட்டியை வாங்கி அதனுள் வைத்தான் அஃப்தாப்,.
அதன்பின்னர் அடுத்த 18 நாள்களாக ஒவ்வொரு நாளும் பின்னிரவு 2 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறிய அவன், ஷ்ரதாவின் உடற்பாகங்களை ஒன்றிரண்டாக நகரின் பல பகுதிகளிலும் வீசியெறிந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மும்பையிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அழைப்பு மையத்தில் பணிபுரிந்து வந்தார் 26 வயதான ஷ்ரதா. அங்குதான் அஃப்தாப்பை அவர் முதன்முதலாகச் சந்தித்தார்.
அவர்களுடைய காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறிய ஷ்ரதா, காதலுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
பின்னர் மகளைச் சந்திக்க வந்த தந்தை, அவரைக் காணாததால் காவல்துறையில் புகார் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது புகாரின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை அஃப்தாப்பைக் காவல்துறை கைதுசெய்தது.
ஷ்ரதா தம்மைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார் என்றும் அதன் தொடர்பில் தங்களுக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்தது என்றும் காவல்துறை விசாரணையின்போது அஃப்தாப் கூறினான்.


