அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5ஆம் தேதியில் இரு கட்டங்களாக 182 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை அடுத்து, மும்முனைப் போட்டி நிலவும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் சூழலில், இத்தேர்தலில் தாங்கள் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் வெளியிட்டார்.
அதில், எல்கேஜி முதல் முதுநிலைப் படிப்பு வரை மகளிருக்கு இலவசக் கல்வி; வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவி நிதி; ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை; மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந் தோர், மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.
அதேநேரத்தில், காங்கிரசில் இருந்து விலகியவர்கள் பலருக்கும் பாஜக இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிஉள்ளது. ஆனால், ஏற்கெனவே பாஜகவில் இருந்து வரும் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி காரணமாக சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
ஹா்ஷத் வாசவா, மது ஸ்ரீவத்சவ், தினேஷ் படேல், சதீஷ் படேல், அர்விந்த் லதானி உள்ளிட்டோர் சுயேச்சையாகப் போட்டியிடாமல் இருக்க அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைமை களமிறங்கி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியும் தன் பங்குக்கு குஜராத் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.
இதனிடையே, ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு அத்தொகுதி மக்களிடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு கோரியுள்ளார்.

