மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ₹32 கோடி மதிப்புள்ள 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை சுங்கத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் ஆக அதிகமாக கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து சுங்கத்துறை அதி காரிகள் கூறுகையில், "ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து வந்த நான்கு இந்தியர்கள் இந்தக் கடத்தலுக்கு என்றே தயாரிக்கப்பட்டிருந்த 'பெல்ட்'டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்துள்ளனர்.
"டோஹாவில் இணைப்பு விமா னத்தில் ஏற வந்தபோது சூடானைச் சேர்ந்த ஒருவர் பெல்ட்டை கொடுத்த தாக விசாரணையில் கூறினர்.
"நால்வரிடம் இருந்தும் ₹28.17 கோடி மதிப்புள்ள 53 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
"மற்றொரு சம்பவத்தில், துபாயில் இருந்து வந்த மூவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ₹3.88 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை மெழுகுபோல் மாற்றி மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.
"இதுதொடர்பாக இரு பெண்கள் உட்பட மூவர் கைதாகினர். 60 வயதுப் பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டிருந்தார்," என்றனர் அதிகாரிகள்.
இதனிடையே, "உங்கள் விழிப் புணர்வைப் பாராட்டுகிறேன். தக்க நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை மூலம் அதிர்ச்சியூட்டும் அளவில் தங்கம் சிக்கியுள்ளது," என சுங்கத் துறை அதிகாரிகளை மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட் டரில் பாராட்டி உள்ளார்.

