ஹைதராபாத்: கேரள மாநிலத்தில் ஏலம் விடப்பட்ட பழைய விமானம் ஒன்றை தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள 'பிஸ்தா ஹவுஸ்' என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த விமானத்தை 'விமான உணவகம்' என மாற்றி வாடிக்கை யாளர்களைக் கவரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, இந்த விமானத்தை ஒரு நீளமான சரக்கு வாகனத்தில் ஏற்றி அதனை கொச்சியில் இருந்து ஹைதராபாத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் முதல் இந்தப் பணி தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், முறையாக விமானத்தை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த வாகனம் எதிர்பாராதவிதமாக ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் உள்ள கொரிசபாடு சுரங்கப்பாதையில் முன்னும் பின்னும் நகரமுடியாமல் சிக்கிக்கொண்டது.
இந்தத் தகவலை அறிந்த பொதுமக்கள் விமானத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டனர்.
இதனை காணொளியாகவும் எடுத்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
விமானத்தை சுரங்கப்பாதையில் இருந்து மீட்பதற்கான வேலையில் காவலர்களும் ஈடுபட்டனர்.
சேதம், விபத்துகள் ஏதுமின்றி விமானத்தை பத்திரமாக வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 'ஏர்பஸ் ஏ320' ரக விமானம் ஏர் இந்தியா நிறுவனச் சேவையிலிருந்து விலக்கப்பட்டது. இது பல ஆண்டு களாக விமான நிறுவனங்களுக்காகப் பறந்தது குறிப்பிடத்தக்கது.

