புதுடெல்லி: இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சிக்கு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 68.23 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதாகவும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு இத்தொகை தேவைப்படும் என்றும் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்திய நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ.4.46 லட்சம் கோடி தேவைப்படும் நிலையில், தற்போது அதற்காக செலவிடப்படும் தொகை வெறும் ரூ.1.43 லட்சம் கோடி மட்டுமே என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
2036ஆம் ஆண்டு இந்திய குடிமக்களில் சுமார் 60 கோடி பேர் நாட்டின் நகர்ப்புறங்களில் வசிப்பர் என மற்றோர் ஆய்வு தெரிவிக்கிறது. அச்சமயம் இந்த எண்ணிக்கையானது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அறுபது விழுக்காடாக இருக்கும்.
"எனவே அச்சமயம் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்.
"தூய்மையான, அதிக குடிநீர் தேவை, நம்பகமான மின்சாரம், பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து ஆகியவை இல்லையெனில் நகர்ப்புற வளர்ச்சியில் பாதிப்பும் தாமதமும் ஏற்படும்," என்று உலக வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

