உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வுப் பாடத்திட்டம்
திருவனந்தபுரம்: பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவில் விழிப்புணர்வு பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார். "உருவக்கேலி என்பது கொடுமையான கலாசாரம். இது நிறுத்தப்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு கல்வியைப் பாடமாகச் சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். மேலும், ஆசிரியர்கள் இதுபோன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும்," என்றார் அமைச்சர் சிவன்குட்டி.
மிசோரம் கல்குவாரி விபத்தில் சிக்கி எட்டுத் தொழிலாளர்கள் பலி
அய்ஸால்: கல்குவாரி விபத்தில் சிக்கி எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிசோரம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. அங்குள்ள மவ்தார் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு பகுதியில் ஏராளமான கற்கள் சரிந்து விழுந்தன. அதில் 12 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியை மேற்கொண்டபோது, எட்டுப் பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மற்ற நால்வரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.
கேரளாவின் நீண்ட நாள் முதல்வர்: பினராயி விஜயன் சாதனை
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அதிக நாள்கள் முதல்வராகப் பதவி வகித்து சாதனை படைத்துள்ளார் பினராயி விஜயன். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவர் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார். இதற்கு முன்பு அச்சுதமேனன் 2,364 நாள்கள் கேரளாவின் முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், 2,365 நாள்களைக் கடந்து பினராயி விஜயன் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார். இத்தகவலை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு, அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் குறித்து அமைச்சர் பேச்சு: மன்னிப்பு கோரிய முதல்வர் மம்தா
கோல்கத்தா: அதிபர் திரௌபதி முர்மு குறித்து மேற்கு வங்க அமைச்சர் தெரிவித்த கருத்துக்காக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு தெரிவித்துள்ளார். அதிபரை உருவக்கேலி செய்யும் விதமாக அமைச்சர் அகில் கிரி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதிபர் திரௌபதி முர்மு மிகச் சிறந்த பெண்மணி என்றும் அமைச்சரின் கருத்துக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதையடுத்து, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

