புதுடெல்லி: காதலியைக் கொன்று 35 துண்டுகளாகக் கூறுபோட்டு ஒவ்வொன்றாக வீசிய அஃதாப் பூனாவாலாவுக்கு மேலும் ஐந்து நாள்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முதலில் பத்து நாள்களுக்கு காவலை நீட்டிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண் டனர். தடுப்புக் காவலில் அஃதாப்பை உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே கொல்லப்பட்ட இளம்பெண் ஷிரத்தாவின் தந்தையிடம் மரபணுக்கூறு மாதிரியை காவல்துறையினர் பெற்றுள்ளனர்.
அஃதாப்பும் ஷிரத்தாவும் 28, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி டெல்லியில் ஒன்றாக வசித்து வந்தனர். ஷிரத்தா, தன்னைத் திரு மணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் அவரை கொன்று 35 துண்டுகளாக வெட்டி ஒவ்வொன்றாக டெல்லி முழுவதும் குப்பை கூளங்களில் அஃதாப் வீசி வந்ததாகக் கூறப் படுகிறது. அப்படி ஒரு நாள் வீசும்போது காவல்துறையிடம் அஃதாப் சிக்கிக் கொண்டார்.
சமையல் அறையில் ரத்தக்கறை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஷிரத்தாவை வெட்ட அமீன் பயன்படுத்திய ஆயுதம் இன்னும் சிக்கவில்லை. அப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் நீண்டநாள் காட்சிகள் பதிவாகவில்லை. இதனால் இந்த வழக்கு காவல்துறைக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சேகரிக்கப்பட்ட உறுப்புகள், ஷிரத்தாவுடையதா என்பதை ஆய்வு செய்வதற்காக, அவருடைய தந்தையிடம் இருந்து 'டிஎன்ஏ' மாதிரிகளை காவல்துறையினர் பெற்றுள்ளனர்.

