"வண்டிக்கு அச்சாணி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு என் செல்லத்துக்கு என் சொல் முக்கியம்," என்கிறார் செல்வம், 50, என்ற யானைப்பாகன்.
படு என்றாலும், எழுந்திரு என்றாலும், கதவு சிறியதாக இருக்கிறது, இடித்துக்கொள்ளாமல் வந்துபோ என்றாலும் அவ யாம்பிகைக்குச் செல்வத்தின் சொல்லே மந்திரச்சொல்; அவரின் சொல்லுக்கு யானை பலம் என்பதைக் கண்டு வியந்தேன்.
திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான அருள்மிகு மயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் வசித்து வருகிறது அவயாம்பிகை என்ற 55 வயது பெண் யானை.
திரு செல்வத்தின் தந்தை வேணு முன்பு இதே கோயிலில் யானைப்பாகனாக இருந்தார். பிறகு திரு செல்வத்தின் அண்ணன் திரு குமார் பாகனாகப் பணி செய்தார்.
திரு செல்வத்தின் தந்தை 75 வயதில் மாண்டுவிட்டார். பிறகு அந்தச் சகோதரரும் இறந்துவிட்டார். அதையடுத்து அவயாம்பிகையைக் கடந்த 22 ஆண்டுகாலமாக பராமரித்து வருகிறார் செல்வம். இதில் திரு செல்வத்தின் ஒன்றுவிட்ட தம்பியான திரு வினோத், 33, உதவி வருகிறார்.
திரு செல்வத்தின் மனைவி இல்லத்தரசி. இத்தம்பதியின் ஒரே மகனான விஷ்ணுகுமார், 20, படித்து வருகிறார்.
"யானையைப் உடல் வெப்பப் பிராணி. அதைக் கோடையில் காலையிலும் மாலை யிலும் சுமார் மூன்று மணி நேரம் சுத்த மாகக் குளிப்பாட்ட வேண்டும். குளிர்காலத்தில் ஒரு வேளை சுத்தப்படுத்தினால் போதும். யானையின் ஒரு பக்கத்தைக் குளிப்பாட்டவே ஒரு மணி நேரம் ஆகும்," என்று கூறினார் திரு செல்வம்.
தன் கையில் சுரசுரப்பான கட்டை ஒன்றை வைத்துக்கொண்டு யானையின் மீது தன் உடலைச் சாய்த்தபடி 'தேய் தேய்' என்று அதன் உடலை அவர் தேய்த்தார்.
முறம் போன்ற காதுகளை மடக்கி சுத்தப் படுத்தினார். அவர் தேய்க்க தேய்க்க அதைச் சுகமாக அனுபவித்தபடி, அவர் சொல் கேட்டு, தன் உடலை வளைத்துக் கொடுத்து யானை ஒத்துழைத்தது.
மோட்டார் இயந்திரத் தண்ணீரில் ஒன்றரை மணி நேரம் திரு செல்வம் தன் செல்லத்தைக் குளிப்பாட்டினார். அப்போது என்னை தன் சிறு கண்களால் பார்த்து பார்த்து தும்பிக்கையை ஆட்டி ஆட்டி மகிழ்ச்சியை அது வெளிப்படுத்தியது.
யானை கீழே படுப்பதற்கு இரு நிமிடங் கள் ஆகின்றன. முதலில் மெதுவாக தன் பின் காலை மடக்கி இலேசாக உடலை வளைத்து திடீரென கீழே படுத்துவிடுகிறது. எழுந் திடவும் இரு நிமிடங்கள் பிடிக்கிறது.
"அவயாம்பிகை காலையில் ஆறு கிலோ அரிசி சாதம் சாப்பிடுவாள். அதோடு, ஒரு கிலோ கேழ்வரகுக் களியும் கொடுக்க வேண்டும். மாலை உணவைப் பொறுத்தவரை ஆறு கிலோ அரிசி சமைத்து அதில் மிளகு, சீரகம், நல்லெண்ணெய் சேர்த்து சாம்பார் சாதம் கொடுக்க வேண்டும்.
"மற்ற நேரங்களில் அவயாம்பிகை நாள் ஒன்றுக்கு 200 கிலோ பசுந்தீவனம் சாப்பிடுவாள். நாணல், புல், சோளத்தட்டை, அரசந்தழை, ஆலந்தழை, மூங்கில் தழை, தென்னை மட்டை, வாழைமரம், கண்ணால முருங்கை, முருங்கை உள்ளிட்ட பலவும் இந்தத் தீவனத்தில் கலந்திருக்கும்.
"இவற்றோடு, பக்தர்கள் கொடுக்கும் பழங்களையும் யானை சாப்பிடும். குடிக்கும் தண்ணீரைப் பொறுத்தவரை அளவில்லை.
"மொத்தமாக ஒரு மாதத்திற்கு அவயாம்பிகை சாப்பாட்டிற்காக ஏறத்தாழ ரூ.100,000 தொகையை மடத்தில் செலவிடுகிறார்கள்.
"யானையைக் குளிப்பாட்டும்போது அதன் பாதம்தான் மிக முக்கியம். சிறு கல், ஆணி, முள் குத்தி இருக்கும். அதை அங்குசத்தின் ஊசியால் குத்தி எடுத்து பாதத்தை தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
"அதே போல காதுகளும் முக்கியம். இல்லை என்றால் இலேசான ஒரு புண் பெரிய பிரச்சினையாகிவிடும்.
"யானை எப்போதுமே ஆடி அசைந்து கொண்டே இருக்கும். இதை நிறுத்திவிட்டால் அதன் உடலில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். அதேபோல, உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டால் கோபமாக இருக்கிறது என்று அர்த்தம்.
"மலச்சிக்கல் என்றால் அதற்கு அத்தசூரணம் என்ற நாட்டு மருந்தை இரவில் கால் கிலோ அளவுக்குக் கொடுப்போம். மருத்துவரை அழைக்க வேண்டும் என்றால் அவர் வந்து யானைக்கு பென்சுலின் ஊசி போட்டு இதர சிகிச்சையும் அளிப்பார்.
"யானையை வெளியே அழைத்து வரும்போது அல்லது மடத்தின் திருவிழாக் களுக்கு அழைத்துச் செல்லும்போது பாகனின் கட்டுப்பாட்டில் அது இருக்கும்.
"நான் சொல்வதை அப்படியே கேட்கும். கொட்டகைக்கு யானை திரும்பிய பிறகு அதன் சுதந்திரத்திற்கு விட்டுவிடவேண்டும்.
குளித்துவிட்டு போன உடனேயே உடலை அழுக்காக்கிக் கொண்டாலும் கோபப்படக் கூடாது. அதன் இருப்பிடத்தின் உள்ளேயும் அதை அடக்கிவைக்க முயன் றால் யானைக்குக் கடுமையான கோபம் வரும். மனநிலை பாதிக்கப்படும்.
"அந்தக் கோபம் சேர்ந்து சேர்ந்து பெரிய அளவில் மாறி சரியான நேரத்தில் பாக னைக் கொலைகூட செய்துவிடும். யானை இரவில் படுக்கும். யானை தன் வாலை தானே மிதித்துவிடும்போது அதன் முடிகள் கீழே விழும். அதை எடுத்து யாருக்காவது தேவை எனில் இலவசமாகக் கொடுப்போம்.
"என் அவயாம்பிகைதான் எனக்குச் செல்லம். மடத்தில் சம்பளம் சொற்பம்தான் என்றாலும் கடைசிவரை அவயாம்பிகைக் காக நான் என்னையே அர்ப்பணித்துக் கொண்டுவிட்டேன்," என்று திரு செல்வம் கூறியதைக்கேட்டு மனதிற்குள் அவரை வாழ்த்தினேன்.
நாள்தோறும் அவயாம்பிகையைக் குளிப்பாட்ட அழைத்துக்கொண்டு கோயிலுக்கு அருகே இருக்கும் கிளை மடத்திற்குத் திரு செல்வம் செல்லும்போது அவருடைய வளர்ப்பு நாய் ஒன்றும் மெய்க்காவலர் போல உடன் சென்று வருவதைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் போதாது.
யானையையும் ரயிலையும் எத்தனை முறை பார்த்துக்கொண்டே இருந்தாலும் ஆசை தீராது என்று சொல்வதைப் போல நான் அவயாம்பிகையைப் பார்த்து பார்த்து வியந்தேன். யானை படுத்தாலும் குதிரை உயரம் இருக்கும் என்பதைக் கண்கூடாகத் தெரிந்துகொண்டேன்.

