புதுடெல்லி: பண மோசடி வழக்கு தொடர்பில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அங்கு பல்வேறு சொகுசு வசதிகளை பெற்றுள்ளார் என்றும் இதற்காக அவர் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.1.62 அளவுக்கு பண மோசடி செய்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது.
கடந்த மே மாதம் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமக்குப் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பிணை மனு மீதான விசாரணையின்போது சத்யேந்தர் ஜெயின் சிறையில் விதிமுறைகளை மீறி பல்வேறு சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. சிறையில் அவருக்கு உடம்புப்பிடி செய்யப்படும் காணொ ளிப் பதிவுகள் வெளியாகி உள்ளன. சத்யேந்தர் ஜெயின் மீது அரசியல் தரகர் சுகேஷ் சந்திரசேகர் இதுபோன்ற குற்றச்சாட்டைதான் முன்வைத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்காக முதல்வர் கெஜ்ரிவால் பலகோடி ரூபாய் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

