பெங்களூரு: மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்று கர்நாடக மாநில தலைமைக் காவல் அதிகாரி(டிஜிபி) உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆட்டோ ஒன்றில் மர்மப் பொருள் வெடித்ததில் ஆட்டோ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் அதி லிருந்த ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர்.
அப்போது ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில் குக்கரும் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டன. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை இது பயங்கரவாதத் தாக்குதலோ என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் நேற்றுக் காலை டுவிட்டர் பதிவில், "ஆட் டோவில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் விபத்து அல்ல என் பதும் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்பதும் உறுதி செய்யப்பட் டுள்ளது. கடுமை யான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தாக்குதலுக்குத் தயாரானதுபோலத் தெரிகிறது.
"மத்திய அரசின் பல்வேறு விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது," என்றார் அவர்.
கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஜனேந்திராவும் இது பயங்கரவாதம் தொடர்பான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இந்த ஆட்டோ வாகனம் துர்கா பரமேஸ்வரி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அதேபோல், இதில் பயணம் செய்த நபரிடம் பிரேம் ராஜ் என்ற பெயரில் அடையாள அட்டை இருந்துள்ளது. இருப்பினும் இந்த அடையாள அட்டை உண்மைதானா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றன. அவருக்கு 50 விழுக்காடு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் உள்ள அவராலும் ஓட்டுநராலும் தற்போது பேச முடியவில்லை. அவர்கள் தேறிய பின்னரே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறமுடியும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை: மங்களூரு வெடிப்புச் சம்பவம் விபத்து அல்ல

