சோம்நாத்: குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, மற்றும் டிசம்பர் 5 தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் 182 தொகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரம், பல்லாண்டு இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் வேட்கையில் காங்கிரசும் தீவிரம் காட்டி வருகிறது. ஆம் ஆத்மி 3வது அணியாக களத்தில் குதித்துள்ளது.
தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பிரதமர் மோடி இம்மாதம் 6ஆம் தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அவர் தமது இரண்டாவது கட்டப் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இதற்காக மோடி மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு குஜராத் சென்றார். வல்சாத் மாவட்டம் ஜூவா சராபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நேற்றுக் காலை நடைபெற்ற பூசையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்த மோடி இரண்டாவது நாள் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மட்டும் நான்கு பிரசாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்
களுக்கு ஆதரவு திரட்டினார்.
சோம்நாத் மாவட்டம் வீராவல் என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில், "வாக்குப்பதிவு நாளில் மக்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். முந்தைய வாக்குப்பதிவு சாதனையை குஜராத் மக்கள் முறியடிக்க வேண்டும்.
"ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாஜக வெற்றிபெறுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களாகிய நீங்கள் அதை எனக்காக செய்வீர்களா?," என்று கேள்வி எழுப்பி பிரசாரம் செய்தார் மோடி. தொடர்ந்து ராஜ்காட் மாவட்டம் தோராஜி, அம்ரேலி, போடட் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.
இரு கட்ட வாக்குப் பதிவிலும் அளிக்கப்படும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படும். பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மோடி கூறிவருகிறார்.

