71,000 பேருக்கு வேலை வாய்ப்பு
புதுடெல்லி: 'ரோஜ்கார் மேளா' திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் முதல்கட்டமாக 75,000 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், நாட்டில் வசிக்கும் 71,000 பேருக்கு காணொளிவழி பிரதமர் மோடி அரசுப் பணிக்கான வேலைவாய்ப்புக் கடிதங்களை நேற்று வழங்கினார்.
ஏர் சுவிதா படிவம் நிரப்பவேண்டாம்
புதுடெல்லி: இந்தியா வரும் அனைத்துலகப் பயணிகள் ஏர் சுவிதா படிவங்களை நிரப்புவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவல் குறைந்து இருப்பதாலும் தடுப்பூசி அதிக அளவில் மக்களுக்குப் போடப்பட்டிருப்பதாலும் படிவங்களை நிரப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீராய்வு மனு: காங்கிரஸ் முடிவு
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என இம்மாதம் 11ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய காங்கிரஸ் கட்சி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில், தங்கள் தரப்பைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடி-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
சூரத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், "பதவியில் இருந்து தூக்கி எறியப் பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைப்பயணம் மேற்கொள்கின்றனர்," என ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
இதனிடையே, ஆதிவாசிகள்தான் இந்த நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றை தொழில் அதிபர்களுக்கு பாஜக வழங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார்.
அனுமதி மறுப்பு; சாலையில் பிரசவம்
திருப்பதி: கணவர், உறவினர் என யாருடைய துணையும் இன்றி தனியாக வந்த நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க திருப்பதி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. இதையடுத்து, மருத்துவமனை அருகே உள்ள சாலையில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு அக்கம்பக்கத்தினர் உதவிக்கரம் நீட்டினர். போர்வை கொண்டு மறைக்கப்பட்டு குழந்தையைப் பெண் பெற்றெடுத்தார்.
"கர்ப்பிணிப் பெண்கள் இனி யாருடைய துணையின்றி வந்தாலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படாது," என்று திருப்பதியின் சுகாதாரப் பொறுப்பாளர் ஸ்ரீஹரி கூறியுள்ளார்.

