புதுடெல்லி: இந்திய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விதமாக 'வியத்தகு இந்தியா' என்ற உலக அளவிலான சுற்றுலா பிரசாரத்தை மீண்டும் தொடங்கி உள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடந்த இருபது ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப்போனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொரோனா நெருக்கடி குறைந்துள்ள நிலையில், இந்திய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க புதுத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
"ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். மேலும், கொரோனா நெருக்கடிக்கு முன்பு காணப்பட்ட விறுவிறுப்பைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
"கடந்த 2019ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.7 கோடியாக இருந்தது.
"எதிர்வரும் 2023ல் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை மீண்டும் பழையை நிலையை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
"இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்வோம்," என சுற்றுலாத்துறை செயலாளர் அர்விந்த் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கலாசார, ஆன்மிக ரீதியில் புத்துணர்வு அளிக்கும் என்றார் அவர்.

