ஜெய்ப்பூர்: ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றதை அடுத்து நாடு முழுவதும் அந்த அமைப்பின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் டிசம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இதில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜி20 அமைப்புடன் தொடர்புள்ள பல்வேறு துணை மாநாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த ஓராண்டு முழுவதும் ஜி20 அமைப்பு சார்ந்த இருநூறு துணை மாநாடுகளை நடத்துவதற்கும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பிரதிநிதிகள் மாநாட்டுக்காக அந்த நகரை அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழகிய சுவரோவியங்கள் முதல் கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகள் அமைப்பது வரை அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, ஜி20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு தமிழகத்தின் கோவையில் நடைபெற இருக்கும் தகவலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
"உலக வணிகத்தின் 80%, ஜி20 நாடுகளில்தான் நடக்கின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஜி20 நாடுகளில்தான் உள்ளனர். எனவே, ஜி20 அமைப்பின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாடு தமிழகத்தின் வணிக நகரான கோவையில் நடத்தப்படுவது பொருத்தமாக இருக்கும்," என மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

