புதுடெல்லி: மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன் என்று அந்நீதிமன்றம் கேட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கும் தொடுத்துள்ளனர்.
இந்த மனுவை நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை எவ்வாறு தேர்தல் ஆணையராக நியமிக்க இயலும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இதற்கான நியமன நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன என்று கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், நியமன ஆணை உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அருண் கோயல் அவசர அவசரமாக மத்திய அரசால் தேர்தல் ஆணையர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், குறுகிய காலத்தில் இந்த நியமனத்தை மேற்கொள்ள பின்னணிக் காரணம் என்ன என்றும் கேட்டுள்ளது.
"தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதான். தலைமைத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது," என்று நீதிபதி ஜோசப் சாடினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் என்பவர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்்கள் நடைபெற்று வருகின்றன.

