ஆக்ரா: காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக ஆக்ரா காவல்துறை யினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், உண்மை யிலேயே ரூ.50 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கஞ்சாவையும் எலிகள்தான் உட்கொண்டனவா என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
ஆக்ரா, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை தடுக்கும் வகையில் காவல்துறை அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சிறப்புப் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, இதர போதைப்பொருள்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது எலிகள்தான் கஞ்சாவைத் தின்றிருக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதற்குரிய ஆதாரங்கள் ஏதும் கைவசம் இல்லை என காவல்துறை தெரிவித்தது.
எனினும், மீண்டும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு எடாஹ் என்ற மாவட்டத்தில் இதேபோல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1,400 பெட்டி மதுபானங்களை எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

