புதுடெல்லி: பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் செயல்பாட்டுக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மன்றத்துக்கு தலைமையேற்று இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நவீன, புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா முன்னோடியாக இருந்தது என்றும் அம்மன்றம் கூறியுள்ளது.
"முன்னோக்கிச் செல்லும் வகை யில் பயங்கரவாதத்துக்கு எதிரான டெல்லி பிரகடனத்தை வரவேற்று ஏற்கிறோம். இது பயங்கரவாதிகளின் புதிய அணுகுமுறைகளை எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய மைல்கல்லாக அமையும்," என்று டெல்லியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் ஹெரால்ட் அத்லய் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தச் சிறப்புக் கூட்டத்தை நடத்தியமைக்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதிகளும் புதிய, நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாத வேலை களுக்குப் பயன்படுத்துவதாகவும் அத்தகைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது இக்கருத்தை மேலும் பல நாடுகள் வரவேற்றன. பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டமானது, மும்பை, டெல்லி ஆகிய இரு நகரங்களில் நடைபெற்றது. வழக்கமாக இத்தகைய சிறப்புக் கூட்டங்கள் ஐநா மன்றத்தின் தலைமையகத்தில்தான் நடைபெறும்.
தீவிரவாதிகளுக்கு எதிரான மோதல் என்ற கருப்பொருளுடன்இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது எனவும் ஆளில்லா வானூர்திகள், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான சீனாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி, இந்தியாவின் நடவடிக்கைகளானது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சவால்களை சிறப்பாகக் கையாள்வது தொடர்பான உறுப்பு நாடுகளின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்துக்கான நிதியுதவி பல்வேறு புது வழிகளின் மூலம் வழங்கப்படுவது தெரிய வந்ததாக ஃபிரானஸ் பிரதிநிதி கூறினார்.
இதேபோல் ஃபிரான்ஸ், பிரேசில் ஐக்கிய அமீரக சிற்றரசு, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இந்தியாவின் தலைமைத்துவம் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டு தெரிவித்தனர்.

