ஆக்ரா: உத்தரகண்ட் மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள 36 பாலங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அண்மையில் குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பாலங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் மூன்று வாரங்களுக்குள் பாதுகாப்புத் தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பல பாலங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பது தெரியவந்துள்ளது.
"மேலும் 36 பாலங்கள் வாகன போக்குவரத்துக்கு தகுதியற்றவையாக உள்ளன. குறிப்பாக பாவ்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 16 பாலங்கள், தகுதியற்ற பாலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை போக, மேலும் ஏழு மாவட்டங்களில் உள்ள இருபது பாலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன," என்று ஆய்வுக்குப் பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பாலங்களைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

