செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8e6ca5fb-c049-43ea-8e42-83bd5ec6fec0
-

வாக்களிக்காவிட்டால் அபராதம்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள சமாதியாலா என்ற கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அக்கிராம மக்கள் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்து வந்துள்ளனர். வாக்களிக்கத் தவறினால் 51 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் குப்பை, நெகிழிப் பொருள்களை பொது இடத்தில் குப்பையாகப் போட்டால், போதைப் பாக்குகளைப் பயன்படுத்தினால், மது அருந்தினால் இதே தொகை அபராதமாக விதிக்கப்படும். மேலும் மரம் வெட்டினால் ஐநூறு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இக்கிராமத்தில் 24 மணி நேர இணைய சேவை, நவீன குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் ஆகியனவும் உள்ளன.

ஆட்டோ வெடிப்பு விசாரணை புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்

பெங்களூரு: மங்களூரில் நிகழ்ந்த ஆட்டோ குக்கர் வெடிப்பு வழக்கின் விசாரணை மிக விரைவில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தற்போது மாநில காவல்துறையு டன் மத்திய புலனாய்வு அமைப்பும் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் நிகழ்ந்துள் ளன. எனவே மத்திய அமலாக்கத்துறையும் தொடக்கம் முதலே இந்த வழக்கை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜி20: ஐந்து பிரச்சினைகளில் கவனம் செலுத்தப் போகும் இந்தியா

புதுடெல்லி: ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இந்தியா ஐந்து முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது. அந்தப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

வளர்ச்சி, செழிப்பு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகளின் மீள் உருவாக்கம், தளவாடங்கள், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த உள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

சீனி ஏற்றுமதி அதிகரிக்கப்படுகிறது

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் சீனி ஏற்றுமதியை அதிக பட்சமாக நான்கு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த சீனி ஏற்றுமதியானது அதிகபட்சமாக 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்தது.