அகமதாபாத்: குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒருவர் மீது மற்றொருவர் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர்.
பாஜகவின் மோசமான செயல்பாடும் அணுகுமுறையும் எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வித்திடாது என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் குஜராத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாலன்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், குஜராத் மாநிலம் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
"இத்தேர்தல் யார் அடுத்த எம்எல்ஏ, எந்த கட்சி இம்மாநிலத்தை ஆளப்போகிறது என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல் அல்ல. மாறாக, அடுத்த 25 ஆண்டுகளுக்கு குஜராத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் இது," என்றார் பிரதமர் மோடி.
இதற்கிடையே, இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரசைவிட அதிக நெருக்கடி கொடுப்பது ஆம் ஆத்மிதான் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

