காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை தம்முடைய நாயகனாக கருதும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறும் கத்தாருக்கு தனியாக கார் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான நாஜி நவ்ஷி, 33, அக்டோபர் 15ஆம் தேதி கேரளாவிலிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குப் பயணம் மேற்கொண்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்தது.
சவூதி அரேபியாவிடம் அர்ஜெண்டினா எதிர்பாராத விதமாக தோல்வியற்றது இவருக்கு வருத்தம் அளித்தாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெக்சிகோவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா சிறப்பாக விளையாடும் என்று நவ்ஜி நம்பிக்கையுடன் உள்ளார்.
"என்னுடைய நாயகன் லயனல் மெஸ்ஸி விளையாடுவதைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளேன். சவூதியிடம் அர்ஜெண்டினா தோல்வியுற்றது ஏமாற்றம் அளித்தாலும், கிண்ணத்தை வெல்வதற்கான அந்த அணியின் பயணத்தில் இது ஒரு சிறிய தடங்கல் மட்டுமே என்று நான் கருதுகிறேன்," என்றார் நவ்ஷி.
தமது 'எஸ்யுவி' வாகனத்தில் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இவர், முதலில் மும்பையிலிருந்து ஓமானுக்கு தமது காரை கப்பலில் அனுப்பினார்.