புதுடெல்லி: மக்கள் அடிமை மனநிலையிலிருந்து வெளியேற வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் வளமான பாரம்பரியம் குறித்து பெருமை கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.
முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாசாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400ஆவது பிறந்த ஆண்டின் நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் சிறந்த தலைவர்கள் பலரது பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் இந்தியாவின் வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும் என்றார்.
"இந்தியாவின் வரலாறு வீரர்களின், வெற்றியின் வரலாறு. தியாகம், சுயநலமற்ற துணிச்சலான வரலாற்றை கொண்டது இந்தியா. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்துக்குப் பிறகும்கூட ஆங்கிலேயர் ஆட்சி கால சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறு தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது.
"சுதந்திரத்துக்குப்பின் அடிமை கொள்கை மாறியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. அடிமை மனநிலையில் இருந்து வெளியேறி, நாட்டின் வளமான கலாசாரத்தில் நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ள வேண்டிய நேரம் இது," என்றார் பிரதமர் மோடி.

