புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
ராக்கெட் ஏவப்பட்டதில் இருந்து பதினேழாவது நிமிடத்தில் அதிலிருந்து பிரிந்த ஓசன்சாட் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களுடன் பிஸ்எல்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான செயற்கைக்கோளை அடுத்து, மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டதாகவும் இரண்டு மணி நேரத்தில் மொத்தமுள்ள ஒன்பது செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக சோம்நாத் கூறினார்.
"இப்போது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 'இஓஎஸ் 6' என்பது ஓசன்சாட் வகையைச் சேர்ந்தது. இதை ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த செயற்கைக்கோள் எனக் குறிப்பிடுவர். இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், தொடர்பான தரவுகளை துல்லியமாக வழங்கும்," என்றார் சோம்நாத்.

