போபால்: தனது பாட்டியும் தந்தையும் கொல்லப்பட்ட போதிலும் தாம் யாரிடமும் வெறுப்புணர்வைக் காட்டியதில்லை என்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
தமது இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது என்றும் மனதில் இருந்து அச்சத்தைப் போக்கிவிட்டால் வெறுப்புணர்வு மறைந்துவிடும் என்றும் அவர் தமது நடைப்பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.
குமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் நேற்று முன்தினம் மத்தியப் பிரதேசத்தில் தமது பயணத்தை தொடர்ந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது என்றார்.
"என் பாட்டி 32 தோட்டாக்களை உடலில் வாங்கிய நிலையில் கொல்லப்பட்டார், என் தந்தையும் கொல்லப்பட்டார். ஆனால் யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகிய நாள், என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது, "வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. நான் வெறுப்பை வளர்க்கவில்லை," என்றார் ராகுல் காந்தி.
மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பில் இருந்து தோன்றியவை என்றும் அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை என்றும் அவர் குறிப்பிட்டார்.

