மோடி: ஜி20 தலைமைத்துவம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு
புதுடெல்லி: அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய நலன் சார்ந்த சவாலான அம்சங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என மன் கி பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இது தொடர்பாக இந்தியா கூடுதல் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
"இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையைப் பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர்.
"அம்ரித் கால் திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்தியா பெற்றது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பு.
"நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளைக் கொண்டு இயங்குகிறோம்," என்றார் பிரதமர் மோடி.
'மனதின் குரல்' நிகழ்ச்சி நூறாவது பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது என்றார்.
இதையடுத்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவரது செயல்பாடுகளை அவர் பாராட்டினார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரைச் சேர்ந்த ஹர்தோய் கிராமத்தில் வசிக்கும் ஜதீன் லலித் சிங் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக நூலகம் ஒன்றைத் தொடங்கி அதை வழிநடத்தி வருவதாகவும் ஜார்க்கண்டை சேர்ந்த சஞ்சய் காஷ்யப் என்பவர் நூலக மனிதன் என குழந்தைகள் மத்தியில் அறியப்படுகிறார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
"யாரேனும் அறிவை நன்கொடையாக அளிக்கிறார்கள் என்றால், சமூக நலன்சார்ந்த உன்னத பணியைச் செய்கின்றனர் என்று அர்த்தம்.
"நாடு முழுவதும் இன்று இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார் பிரதமர் மோடி
லலித் சிங்கின் நூலகத்தில் இந்தி மற்றும் ஆங்கில இலக்கியம், கணினி, சட்டம், அரசுத் தேர்வுகளுக்கான பல புத்தகங்கள் என மூவாயிரம் புத்தகங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், கிராமத்தில் இருந்து நாள்தோறும் வரக்கூடிய 80 குழந்தைகள் விளையாடுவதுடன், நூலகத்தில் படிக்கவும் செய்கின்றனர் என்றார்.
ஜார்க்கண்டின் பல மாவட்டங்களில் ஏழை மற்றும் பழங்குடியின மக்கள் நலன்களுக்காக நூலகங்களை சஞ்சய் காஷ்யப் நூலகங்களை திறந்துள்ளார் என்றும் அவரது செயல்பாடு ஒரு சமூக இயக்க வடிவத்தைப் பெற்றுள்ளது என்றும் பிரதமர் மோடி மேலும் கூறினார்.

