அந்நிய செலாவணி கையிருப்பு ஏறுமுகம்: ரிசர்வ் வங்கி தகவல்

அந்நிய செலாவணி கையிருப்பு ஏறுமுகம்: ரிசர்வ் வங்கி தகவல்

2 mins read
073ced11-ca91-4686-b13a-d701aa9f2712
-

புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக அந்நிய செலாவணி அதிகரித்து 54,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை.

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால், அது உலக அளவில் பல மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான முதலீடுகள் பல அனைத்துலக முதலீடுகளாக மாறின. இதன் விளைவாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அக்டோபர் மாதத்தில் 83 ரூபாய் வரை சரிந்தது என ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த பிப்ரவரி மாதம் 63,100 கோடி டாலராக இருந்த நிலையில், அக்டோபர் 21ஆம் தேதி நிலவரப்படி அது 52,400 கோடி டாலராக சரிந்தது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் வட்டி விகித அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால், கடந்த இரு வாரங்களாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கான முதலீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. நவம்பர் 11ஆம் தேதியன்று 54,400 கோடி டாலராக அது அதிகரித்தது. அதன் பின்னர் நவம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி 54,700 கோடி டாலராக மேலும் அதிகரித்துள்ளது.

இத்தகைய சாதகமான சூழலில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 81.67 ரூபாயாக அதிகரித்துள்ளது என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.