புதுடெல்லி: இந்திய கடற்பகுதிக்கு அருகே அரபி, வங்கக் கடல்களில் இரண்டு புதிய புயல் சுழற்சிகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலின் தென்கிழக்குப் பகுதியிலும் குறைந்த வெப்பமண்டல மட்டங்களின் சுற்றுப்புறங்களிலும் புதிய புயல் சுழற்சி காணப்படுகிறது.
இதேபோல். வங்காள விரிகுடா கடலில் கிழக்கு மத்திய பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் மற்றொரு சுழற்சி உருவாகி உள்ளது.
"இது நடுத்தர வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளது. இதனால் அடுத்த நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு அந்தமான், நிக்கோபார் தீவுகள், கேரளா, கர்நாடகம், தமிழகம் ஆந்திர மாநிலங்களில் மிதமான பழை பெய்ய வழிவகுக்கும்," என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நாட்டின் வடமேற்கு, மத்திய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையானது எட்டு முதல் பத்து டிகிரி வரை இருக்கும் என்றும் கிழக்கு ராஜஸ்தானில் அடுத்த இரு நாள்களுக்கு குளிர் அலைகள் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் நேற்று முன்தினம் காலை குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரியாக பதிவானது. இது இயல்பைவிட மூன்று புள்ளிகள் குறைவு. மேலும் சில வடமாநிலங் களிலும் குளிர் வாட்டத் தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலை வேளையில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்தனர்.

