சாக்லேட் சாப்பிட்ட சிறுவன் பலி
வாரங்கல்: வெளிநாட்டிலிருந்து தந்தை ஆசையாய் வாங்கி வந்த சாக்லேட் தொண்டையில் சிக்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்தான்.
தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகரைச் சேர்ந்தவர் கன்வர் சிங். ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்தவர், கடந்த வாரம்தான் சொந்த ஊர் திரும்பினார். இவரது இரண்டாவது மகன் சந்தீப், நான்காம் வகுப்பில் படித்து வந்த நிலையில், தனது தந்தை வாங்கி வந்திருந்த சாக்லேட்டை பள்ளிக்கு எடுத்துச் சென்று, பாடவேளையில் ஆசிரியருக்குத் தெரியாமல் அவசர அவசரமாக சாப்பிட்டுள்ளார். அப்போது, தொண்டையில் சாக்லேட் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். வாரங்கல் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒலிம்பிக் சங்கத் தலைவராகும் உஷா
புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா, 58, போட்டியின்றித் தேர்வாகிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் இவர் பெற உள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்பதால், பி.டி.உஷாவைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
பாரதியார் வாழ்ந்த வீடு புதுப்பிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார் நான்கு ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட உள்ளதாக வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் 'சிவமடம்' எனப் பெயரிடப்பட்ட தன் அத்தை வீட்டில் கடந்த 1898 முதல் 1902ஆம் ஆண்டுவரை பாரதியார் தங்கியிருந்தபோது, அவர் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லவில்லை. எனினும், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத்தேர்ந்தார். பாரதியார் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது வழித்தோன்றல்கள் வசித்து வருகின்றனர்.
தேர்தலில் முன்னாள் வீரர் போட்டி
காந்திநகர்: குஜராத் தேர்தலில் ஹிம்மத்நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் மாகன்பாய் சோலங்கி (படம்) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர், நன்கு அடர்த்தியான 2.5 அடி நீள மீசை வைத்துள்ளார்.
"நான் ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடுகிறேன். இந்த மீசைதான் என்னை சுயேச்சையாக நிற்கவைக்க உதவியது. மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்வேன்," என அவர் கூறியுள்ளார்.

