திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ் சம் பகுதியில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வரும் தனியார் துறைமுகத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள மீனவர்கள் கடந்த சில நாள்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனியன்று இப்போராட் டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி திருவனந்தபுரம் காவல்நிலையத்திற்கு எதிரே திரண்டிருந்த 2,000 மீனவர்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி காவலர்கள் எச்சரித்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தால் மட்டுமே அங்கிருந்து செல்வோம் எனப் போராட்டக்காரர்கள் உறுதியாக நின்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களைக் காவலர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களைச் சூறையாடி, நாசப்படுத்தினர்.
அத்துடன் படகுகளின் துடுப்பு, இரும்புக் கம்பிகளால் மீனவர்கள் தாக்கியதில் டிஎஸ்பி உள்பட 36 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் எட்டுப் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கைதான ஐவரில் நால்வர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 2,000 போராட்டக்காரர்கள்மீது வழக்குப் பதிந்திருக்கும் காவலர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொதுச் சொத்துகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விழிஞ்சம் துறைமுகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கடல்வளத் தையும் மீனவர்களையும் அழிக்கும் வகையில் உள்ள அதானியின் துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கோரி 100 நாள் களுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த கடற்கரை கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தனர். அத்துடன், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் கூறியுள்ளார்.

