கைபேசி கோபுரத்தைத் திருடிச் சென்ற கொள்ளையர்கள்
பாட்னா: பாட்னாவில் ரூ.19 லட்சம் மதிப்புடைய கைபேசி கோபுரத்தைக் கொள்ளைக் கும்பல் ஒன்று பெரும்பாடுபட்டு இரவு பகல் தூங்காமல் கண்விழித்து திருடிச் சென்றுள்ளது.
கோபுரம் அமைந்துள்ள நில உரிமையாளரை அணுகியுள்ள இந்தக் கும்பல், குறிப்பிட்ட கைபேசி கோபுரத்தால் ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் அந்தக் கோபுரத்தை அங்கிருந்து அகற்றப் போவதாகவும் கூறியிருக்கிறது.
இதையடுத்து, உரிமையாளரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில், மூன்று நாள்களாக கண்விழித்து கோபுரத்தை பகுதி பகுதியாகப் பிரித்து தூக்கிச்சென்று உள்ளது கொள்ளைக் கும்பல். இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
நான்கு நகரங்களில் நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்
புதுடெல்லி: டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. இப்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக நாளை டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் இந்த டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாக உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1ஆம் தேதியும் அகமதாபாத், கவ்காத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவாகவும் அறிமுகமாக உள்ளது. இதன்மூலம் ரூ.1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் பணம் புழக்கத்திற்கு வரவுள்ளன.

