திப்ரூகர்: அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் பகுதியில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் நடந்த ராகிங் சம்பவம் குறித்து நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக திப்ரூகர் துணை ஆணையர் பிஸ்வஜித் பெகு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த முதுகலை முதலாம் ஆண்டு மாணவரான ஆனந்த் சர்மாவை அங்கிருந்த மூத்த மாணவர்கள் 'ராகிங்' செய்துள்ளனர்.
அவர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் பல்கலைக்கழகத்தின் இரண் டாவது மாடியிலிருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவரை உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அவருடைய உடல்நிலை சற்று தேறி வருவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மாணவரின் தாய் சரிதா சர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், என் மகனை உடல், மன ரீதியாக சித்திரவதை செய்து, அவன் வைத்திருந்த பணத்தையும் கைப்பேசியையும் பறித்துள்ளனர்.
கட்டாயப்படுத்தி அவனது வாயில் மதுவை ஊற்றி, கஞ்சா புகைக்க வைத்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் மகனைக் கொடுமைப்படுத்தி உள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், இப்போது படித்து வரும் நான்கு மாணவர்கள் என ஐவரை கைது செய்து விசாரித்து வருவதாக திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 21 மாணவர்களை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்துள்ள அசாம் கல்வி அமைச்சர் டாக்டர் ரனோஜ் பெகு, "இதுபோன்ற செயல்களை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவங்கள் இனியும் நடக்காமல் பல்கலைக்கழக அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்னாள் மாணவர்களை விடுதிகளில் தங்க அனுமதிக்கக் கூடாது," என்று கூறினார்.

