காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நாளை 1ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலுக்கான அனல் பறக்கும் இறுதிக் கட்டப் பிரசாரம் நேற்றுடன் ஓய்வடைந்தது.
நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பம்பரம் போல் சுழன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வழக்கமாக பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் இங்கு நேரடி போட்டி இருக்கும். ஆனால், இம்முறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களைக் களமிறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவுடன் காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று கடைசி நாள் பிரசாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் குஜராத்தில் முற்றுகையிட்டு வாக்குச் சேகரிப்பில் மும்முரம் காட்டினர்.
ராஜ்கோட்டில் நடந்த பிரசாரத்தில் "ஒரு பொருளாதார நிபுணரால் சாதிக்கமுடியாததை தேநீர் விற்ற சாமானியனான நான் சாதித்திருக் கிறேன்," என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியது அரசியல் களத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.
"11வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் ஆட்சியையும் 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தை அடைய எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பாஜக ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து வாக்களியுங்கள்," என்று மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் கேதா நகரில் மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, "பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். இது தவறு.
"நாட்டின் அமைதிக்காகப் பாடுபட்ட இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய இரு தலைவர்களை பயங்கரவாதத்துக்கு தியாகம் செய்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.
"குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி," என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதனிடையே, தன் தோற்றத் தைக் கெடுக்கவேண்டும் என்பதற்காகவும் தன் மீது தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுப்பதற்காகவும் ஆயிரம் கோடி அளவுக்கு பாஜக பணம் செலவழித்துள்ளதாக இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

