செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
054e1657-f6d7-4f6d-bc1d-92cc7d7c7518
-

கேரளாவிலும் தட்டம்மை பரவல்

மும்பை: மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பாதிப்பு அதிகம் தென்படுவதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாதிப்பு, இப்போது கேரள மாநிலத்திலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தில் 160 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

'மக்களுக்குக் கிடைத்த பரிசு கீதை'

குருசேத்திரம்: ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் இந்தியா தந்த ஆன்மிகப் பரிசுதான் பகவத் கீதை என்று அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம், குருசேத்திரா நகரில் நடைபெற்ற அனைத்துலக கீதை திருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், நடைமுறை வாழ்வில் எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் கீதையின் போதனைகள் தீர்வு அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

பாஜகவுக்கு ரூ.614 கோடி நன்கொடை

புதுடெல்லி: இந்தியாவின் ஏழு தேசியக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ.778.7 கோடியை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ளது. இந்த நிதியில், 2021-2022ஆம் நிதியாண்டில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் ரூ.614.50 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது. காங்கிரசைவிட பாஜக பெற்றுள்ள நன்கொடை ஆறு மடங்கு அதிகம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

எம்.பி. கார் மோதி சிறுவன் பலி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஹரிஷ் திவிவேதியின் கார் மோதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அபிஷேக், 9, என்ற சிறுவன் உயிரிழந்தான். காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்க்காமல், அப்படியே விட்டுச்சென்றுவிட்டதாக எம்.பி.மீது சிறுவனின் தந்தை சத்ருகன் ராஜ்பார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு மடங்கான கைப்பேசி ஏற்றுமதி

புதுடெல்லி: உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் டுவிட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, நடப்பாண்டில் கைப்பேசி ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது.

"ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங் களுக்குள் கைப்பேசி ஏற்றுமதி ஐந்து பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்தியா பெற்ற 2.2 பில்லியன் டாலரை விட இருமடங்கு அதிகம்," என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.