சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், ஃபாசில்கா பாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த ஆளில்லா வானூர்தி மூலமாக வீசப்பட்ட 25 கிலோ ஹெராயின் போதைப்பொருள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டது.
பஞ்சாப்பில் பகவந்த் மான் தலை மையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில், இங்குள்ள சுரிவாலா சுஸ்தி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா வானூர்தி ஒன்று, வானில் வட்டமிடுவதைக் கண்காணித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை நோக்கிச் சுட்டனர்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆளில்லா வானூர்தி பாகிஸ்தானுக்கே திரும்பிச் சென்றது.
அதன்பிறகு, அங்குள்ள பகுதிகளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 7.5 கிலோ ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி, 50 தோட்டாக் கள் ஆகியன எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து நடந்த தேடுதல் வேட்டையில், மேலும் ஏழு பொட்டலங்களில் இருந்த 17.5 கிலோ ஹெராயின் என மொத்தமாக 25 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது.
ஆளில்லா வானூர்தி மூலம் வீசப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்ல சிலா் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனா். அவா்களை நோக்கி வீரா்கள் சுட்டதும் அவா்கள் தப்பித்து ஓடிவிட்டனா்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் இருந்து வந்த மூன்று ஆளில்லா வானூர்திகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு, 15 கிலோ போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.