வரிசையில் நின்று வாக்களித்த மோடி
அகமதாபாத்: குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் இரண்டாம், இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 93 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதுமுதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களித்தார்.
வாக்களித்தபின் தனது விரலில் வைக்கப்பட்டிருந்த மையைக் காண்பித்து, அனைவரும் வாக்களிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, தன் டுவிட்டர் பதிவில், "குஜராத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலில் குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டுகிறேன்," எனப் பதிவிட்டிருந்தார்.
அகமதாபாத் நகரில் உள்ள நாரன்புரா பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்களித்தார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், "இம்முறை வித்தி யாசமாக ஏதாவது செய்யுங்கள்," என குஜராத் வாக்காளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
"ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் கால் பதிக்க கடுமையாக உழைத்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் அரிய வாய்ப்பாகக் கிடைத்துள்ளது. குஜராத்தின் முன் னேற்றத்திற்காக வாக்களியுங்கள். ஒரு வித்தியாசமான, அற்புதமான முயற்சியைச் செய்யுங்கள்," என கெஜ்ரிவால் டுவிட் செய்திருந்தார்.
காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 833 வேட்பாளர்கள் இந்த இரண்டாவது கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாஜகவும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காங் கிரசும் புதிய புரட்சி படைக்க ஆம் ஆத்மியும் காய் நகர்த்தி உள்ளன.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

