பாட்னா: சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், 74, நலமுடன் இருப்பதாக அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம் லாலுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத், பல்வேறு உடல்நலப்பிரச்சினைகள் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, லாலுவின் மூத்த மகளான ரோகிணி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலுவின் குடும்பத்தினர் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக லாலுவின் மகன் தேஜஸ்வி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
''சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. என் தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு நலமுடன் உள் ளார். எனது சகோதரி ரோகிணியும் நலமுடன் இருக்கிறார். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி,'' எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யாவுக்கு பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தன் டுவிட்டர் பதிவில், "நீங்கள் ஒரு முன்னுதாரணமான மகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். எதிர்காலத் தலைமுறையினருக்கு உதாரணமாகத் திகழ்வீர்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

