சுக்விந்தர் சிங் முதல்வரானார்
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் நேற்று பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி ஹோத்ரி பதவி ஏற்றார்.
இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காசி தமிழ்ச் சங்கம ரயில் சேவை
வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமம் பெயரில் விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ரயில் நிலைய சீரமைப்புத் திட்டப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் வாரணாசி-தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பாஜக எம்பியை உதைத்த பசு
குண்டூர்: ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மேலவை உறுப்பினரான ஜிவிஎல் நரசிம்ம ராவ், குண்டூரில் பசுவைத் தொட்டு வணங்க இரண்டு முறை முயன்றார். இரண்டு முறையும் பசு பின்னங்காலால் அவரை உதைத்து விட்டதாகவும் இந்தச் சம்பவம் கொஞ்ச நேரம் பரபரப்பைக் கிளப்பியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்திய விமானத்தில் பாம்பு
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு நகரில் இருந்து புறப்பட்டுச் சென்று சனிக்கிழமை துபாயில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சரக்குப் பகுதியில் பாம்பு ஒன்று இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் இது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் தெரிவித்தது. இதன் காரணமாக பயணிகள் துபாயிலேயே 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக டுவிட்டரில் காணொளியுடன் ஒரு தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
1.6மி. பேர் குடியுரிமை துறந்தனர்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 1.6 மில்லியன் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையை வேண்டாம் எனத் துறந்து வெளிநாடுகளில் குடியேறிவிட்டதாக நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த விளக்கத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 183,741 பேர் குடியுரிமையைத் துறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

