வாரணாசி: தமிழகத்துக்கும் காசிக்கும் இடையில் உள்ள ஆன்மீகத் தொடர்பை பிரதமர் மோடி புதுப்பித்துள்ளார். அந்த வகையில் தமிழக கலை, இலக்கியங்களை பிரபலப் படுத்த வேண்டும் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தி உள்ளார்.
"காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி, பிரத மரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,500 பேர் காசிக்கு வந்தனர். காசிக்கு வந்த 2,500 பேர், 25,000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள். எனவே இது ஆரம்பம்தான். காசி தமிழ் சங்கமம் பற்றி இதற்கு முன்பு யாரும் யோசிக்கவில்லை. காசி யுடன் தொடர்புடைய தென்காசி உள்பட தமிழகத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்தத் தொடர்புகளை பிரதமர் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார்," என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கக் கலாசார நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தெரிவித்தார். காசியுடன் தொடர்புள்ள தமிழகப் பகுதிகளுக்கு உத்தரப்பிரதேச மக்கள் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அனுராக் தாக்கூர், தமிழகத்தின் கலை, கலா சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

