சர்ச்சை ஏற்படுத்திய இணையத் தொடர்: தடை விதித்தது மத்திய அரசு
புதுடெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள இணையத் தொடரை வெளியிட்ட ஓடிடி தளத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. அக்குறிப்பிட்ட இணையத் தொடரில் மும்பை தாக்குதல் தொடர்பாக தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால் அந்த இணையத் தொடரை வெளியிட்ட பாகிஸ்தான் ஓடிடி செயலியை இந்தியா தடை செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை: ஆய்வுக் குழு கேரளாவுக்கு சாதகமாக அறிக்கை
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் ஏற்படாது என கேரள அரசு நியமித்த தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது. இந்தக் குழு அண்மையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், கேரள அரசிடம் அக்குழு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணையைக் கட்ட கேரளா முயற்சி செய்து வருகிறது. எனினும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்துக்குத் சாதகமாக அமைந்தது. இந்நிலையில் புதிய அணை கட்டும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு நடத்த கேரள அரசு தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை கேரள அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
பிரதமர் குறித்து சர்ச்சைப் பேச்சு:
மூத்த காங்கிரஸ் பிரமுகர் கைது
போபால்: பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் கைதாகி உள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜா பட்டேரியா அண்மையில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்றும் அவரைக் கொல்ல தயாராக வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசுவது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர் மீது பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த மத்தியப் பிரதேச காவல்துறையினர், ராஜா பட்டேரியாவைக் கைது செய்தனர்.
ராகிங் கொடுமை: 44 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமைக்கு ஆளாவதாக பல மாண வர்கள் புகார் எழுப்பி உள்ளனர். இந்நிலையில், இத்தகைய புகார்களின் பேரில் 44 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹல்ட்வானியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரி விடுதியில் புது மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். அப்போது ஒரு மாணவரை நிர்வாணப் படுத்தி அதை காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரமும் 43 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சம் கொள்ளை
கோல்கத்தா: சிபிஐ அதிகாரிகள் வேடத்தில் சென்று தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கும்பலுக்கு மேற்குவங்க காவல்துறை வலைவீசியுள்ளது. மொத்தம் எட்டு பேர் கொண்ட அக்கும்பல் சுரேஷ் வாத்வா என்ற 60 வயது தொழிலதிபர் வீட்டுக்கு மூன்று வாகனங்களில் சென்று, கைவரிசை காட்டியுள்ளது. பின்னர் சோதனை நடத்துவதாகக் கூறி, வீட்டில் இருந்த நகை, ரொக்கப்பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

